தை மகளே வருக!
தரணியில் வளம் தருக...
மார்கழிப் பனிப்பொழிவு மெல்லக் குறைந்திட
ஊர்முழுதும் செங்கரும்புகள் காட்சியளிக்க
வார்த்தெடுத்த புதுப்பானைகள் பொலிவாக
சேர்குழலியாய் தைமகள் தரணி வருகிறாளே…
மழைமகள் குறைவாக அருளிய மழையிலும்
பிழையில்லா விளைச்சல் நெல் வீடு வரவே
உழைத்த உழைப்பின் பயன் உழவருக்கென்றாக
பிழைக்கும் பிழைப்புக்கு நன்றி சொல்லிடவே…
வெண் பொங்கல் சர்க்கரைப் பொங்கலென
கண் நிறைக்கும் பொங்கல்கள் எங்கும் நிறைய
மண் மணம் தமிழர் பெருமையில் நெஞ்சம்விம்ம
விண்ணின் முழங்க தை மகளே பொங்கி வா…
உண்ணக் கிடைக்கும் உணவுப் பொருட்கள்
எண்ணம் நிறைந்து உள்ளம் உவகை கொள்ள
எங்கணும் மகிழ்ச்சி வெள்ளம் பெருகிப் பெருகி
பொங்கலோப் பொங்கல் என முழங்கியதே...
0 Comments